"நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு... எனக்கு ஏன் பாதுகாப்பு"- சீமான் பரபரப்பு பேட்டி!
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"பலருக்கும் 'Y' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகர் மக்களை சந்திப்பது சிரமம். அதனால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு என நினைப்பேன். எனக்கு ஏன் பாதுகாப்பு என கேட்பேன். கோவை குண்டு வெடிப்பு பற்றி பேசுபவர்கள், குஜராத் கலவரம் பற்றியும் பேச வேண்டும். இஸ்லாமியர் எனக்கு வாக்கு செலுத்தியதில்லை. சிறையில் இருந்த போதில் இருந்து பாட்ஷாவை நான் அப்பா என்று தான் அழைத்தேன். மயிலாடுதுறையில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடுமையானது.
அரசு எந்த பிரச்னைக்கும் பொறுப்பு ஏற்பது இல்லை. வட மாநிலத்தவர்கள் ரயிலில் எந்த ஒழுக்கத்தையும் பின்பற்றுவதில்லை. தவெக-வில் ஏற்கெனவே இரு வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். பீகாரில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. பீகாரில் நின்று ஒருதொகுதியில் கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? ரூ.300 கோடி கொடுத்தால் எல்லோரும் வேலை செய்வார்கள். முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர்கள் இருந்தவரைக்கும் தேர்தல் வியூக வகுப்பாளர் தேவைப்படவில்லையே?"
இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.