“கடைக்கோடி மக்களிடம் கூட பேசும் முதலமைச்சர் நான் தான்” - பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடியில் இருக்கும் மக்களிடம் கூட பேசும் முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த அவர், நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :
“நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலானாலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை, உங்களை பார்க்கும்போது எனக்கு வருகிறது. பொள்ளாச்சி என்றாலே கவிஞர் மருதகாசி எழுதின பாடல் தான் நினைவுக்கு வரும். ‘பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில’ என்ற அந்த பாடல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இன்றைய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த பாடல் பொள்ளாச்சியின் வர்த்தக பெருமையை கூறுகிறது.
கோவை மாவட்டத்துக்கு இதுவரை 4 முறை வந்திருக்கிறேன். 1,48,949 பேருக்கு ரூ.1441 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்கிறேன். இன்று 5வது முறையாக வந்திருக்கிறேன். இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமிக்கு பாராட்டுகள். வாழ்த்துகள். அமைச்சர் முத்துசாமி அமைதியானவர். அடக்கமானவர். அதே நேரம் ஆற்றல் மிக்கவர். களத்தில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர். இது அரசு நிகழ்ச்சியா அல்லது மண்டல மாநாடா என்று எண்ணக்கூடிய அளவுக்கு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள 4 மாவட்ட அமைச்சர்களுக்கும், ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.
3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை தலைப்புகளாக பட்டியலிட விரும்புகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர்க்கு விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, கள ஆய்வில் முதலமைச்சர், மக்களுடன் முதல்வர், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் நீங்கள் நலமா திட்டம்.
இதையும் படியுங்கள் : ‘மஞ்சும்மல் பாய்ஸ்’-க்கு வந்த சோதனை – ஓடிடியில் வெளியாவதில் சிக்கல்!
கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடியில் இருக்கும் மக்களிடம்கூட பேசும் முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான். இதை கர்வத்தோடு சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். அடக்கத்தோடு, உரிமையோடு சொல்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் உணர்வையும் மதிப்பவன் நான். உங்களின் கருத்துக்களை காதுகொடுத்து கேட்பவன் நான். உங்களின் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்ற உழைப்பவன் நான். இதற்காக தான் நீங்கள் நலமா திட்டம். மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவதால் தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் உயர்கிறது. வேலைவாய்ப்பு பெருகுகிறது. பொருளாதாரம் வளர்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளர்கிறது”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.