“ரஜினியை எல்லாம் எதிர்த்துதான் 43 ஆண்டுகால அரசியல் களத்தில் நிற்கிறேன்” - தவாக தலைவர் வேல்முருகன் பேச்சு!
“ரஜினியை எதிர்த்துதான் 43 ஆண்டுகால அரசியல் களத்தில் நிற்கிறேன்” என தவாக தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் மறைந்த எழுத்தாளர் விஸ்வகோஷ் (எ) ராஜேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன், நடிகரும், இயக்குநருமான தங்கர்பச்சன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எழுத்தாளர் பவா சொல்லதுறை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய தவாக தலைவர் வேல்முருகன், “தனியார் தொலைக்காட்சி எழுத்தாளர் பவா செல்லதுரை பற்றி ஒரு நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்தி விட்டதை கண்டித்து, தொலைக்காட்சியை அடித்து நொறுக்குவேன் என்று அறிவித்தேன்.
தமிழ் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட்டணியில் இருந்தாலும் கண்டித்து
பேசுவேன். என்னை பொறுத்தவரை கூட்டணி, கட்சி, தேர்தல், உடன்படிக்கை ஆகியவை
அதற்கப்பால் தான். தமிழ்நாட்டில் ஒரு கதாநாயகன் நேற்று ஒரு கட்சியை ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கையை இணையதளத்தில் வெளியிட்டார். அவருக்கு 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்கள் என செய்திகள் வருவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் கூகுள் பிளாக் ஆகிவிட்டதாக கூறுகின்றனர்.
40 ஆண்டு காலமாக பொது வாழவை அர்ப்பணித்து நானும், திருமாவளவன் போன்ற ஆளுமைகள் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வருகிறோம். எண்ணற்ற தியாகிகளை இளைய சமூகம் தூக்கி எறிந்து விட்டு, கூத்தாடிகளை தூக்கி கொண்டாடும் நிலை உடைக்கப்பட வேண்டும். நான் பேசிவிட்டு வெளியில் சென்றால் விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும். சூப்பர் ஸ்டாரை எல்லாம் எதிர்த்து தான் 43 ஆண்டு கால அரசியல் களத்தில் நிற்கிறேன்.