“அரசியலில் இருந்து விலகுகிறேன்” - ஒய்எஸ்ஆர் காங். எம்பி விஜய சாய் ரெட்டி எடுத்த திடீர் முடிவு!
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த விஜய சாய் ரெட்டி, அரசியலில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நாளை (ஜன.25) ராஜினாமா செய்கிறேன். எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. பதவியையோ, பலனையோ, பணத்தையோ எதிர்பார்த்து ராஜினாமா செய்யவில்லை. இது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. இதில் எந்தவித அழுத்தங்களும் இல்லை.
நான்கு தசாப்தங்கள் மற்றும் மூன்று தலைமுறைகளாக என்னை நம்பி என்னை ஆதரித்த ஒய்.எஸ் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்பை தந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கும், என்னை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு சென்ற பாரதம்மாவுக்கும் நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு நல்ல ஆரோக்கியம், மகத்தான வெற்றி, மகிழ்ச்சி மற்றும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நாடாளுமன்றக் கட்சித் தலைவர், மாநிலங்களவைத் தலைவர், ஒய்எஸ்ஆர் காங்கிரசின் தேசியப் பொதுச் செயலாளர் என கட்சி மற்றும் மாநில நலனுக்காக அயராது, நேர்மையுடன், எந்த சமரசமும் இன்றி உழைத்தேன். மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் இடையே நல்லுறவைப் பேணுவதற்கும், மாநிலத்துக்கு அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்கும் பாலமாக பணியாற்றினேன்.
கடந்த 9 ஆண்டுகளாக தெலுங்கு மாநிலங்களில் எனக்கு பலத்தையும் அங்கீகாரத்தையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு தேசக் கட்சியுடன் எனக்கு அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம், ஆனால் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை. பவன் கல்யாண் உடன் எனது நட்பு என்றென்றும் நீடிக்கும்.
எதிர்காலத்தில், எனது கவனம் விவசாயத்தில் இருக்கும். எனது மாநில மக்கள், நண்பர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் நீண்ட அரசியல் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.