“யுவராஜ் சிங்கிற்கு பெருமை சேர்த்துள்ளேன்..” - சதம் விளாசிய அபிஷேக் சர்மா புகழாரம்!
இந்திய வீரர் அபிஷேக் சர்மா சர்வதேச கிரிக்கெட்டின் முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். 2வது போட்டியில் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தியிருந்தார். இதன் மூலம் தனது வழிகாட்டி யுவராஜ் சிங்குக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூலை 7) ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் இளம் வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டம். 47 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இதில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்று இருந்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “எனது ஆட்டத்திறன் மேம்பட என் வழிகாட்டியும், ரோல் மாடலுமான யுவராஜ் சிங்கின் பங்கு அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளாக எனது கிரிக்கெட் ஆட்டத்தை பக்குவம் ஆக்கியவர். இந்தப் பணியில் அவர் செலுத்திய உழைப்பு கடுமையானது. கிரிக்கெட் என்று இல்லாமல் எனது வாழ்வில் நல்லதொரு வழிகாட்டியாக உள்ளார். இது அனைத்தும் அவரால் தான்.
நான் முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இருந்தேன். அதன் பின்னர் அவருக்கு போன் செய்தபோது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. சதம் விளாசிய பிறகு மீண்டும் அவருக்கு போன் செய்தேன். பெருமை கொள்வதாக சொல்லி இருந்தார். இது தொடக்கம் தான் எனத் தெரிவித்தார். இதுபோன்ற இன்னிங்ஸ் வரும் நாட்களில் என்னிடம் இருந்து இன்னும் அதிகம் வரும் என்று சொன்னார்.
அதிகம் யோசிக்காமல் ஆடுமாறு ருதுராஜ் சொல்லி இருந்தார். அது பெரிதும் உதவியது. நான் ஷுப்மன் கில் பேட்டினை பயன்படுத்தி விளையாடினேன். எப்போதெல்லாம் அவரது பேட்டை பயன்படுத்துகிறேனோ அப்போதெல்லாம் சிறப்பாக ஆடியுள்ளேன். அதுவே இப்போதும் நடத்துள்ளது. அவருக்கு நன்றி” என அபிஷேக் சர்மா தெரிவித்தார்.