“ஸ்ரீ உடல் நலத்தில் எனக்கும் அக்கறை உள்ளது” - குற்றச்சாட்டுக்கு இறுகப்பற்று தயாரிப்பாளர் விளக்கம்!
வழக்கு எண் 18/9, படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீ. இதையடுத்து அவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம்பெற்றார். இதனிடையே அவர் சில நாட்கள் பிரபலமான ரியாலிட்டி ஷோ-வில் கலந்துகொண்டார்.
ஸ்ரீ நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு இறுகப்பற்று திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் படங்கள் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் நடிகர் ஸ்ரீ மெலித்த உடலுடன் காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியது.
இது குறித்து பலர் சமூகவலைத்தளங்களில் பல்வேறு காரணங்களை கூறி அவருக்காக வருத்தப்பட்டனர். குறிப்பாக ஸ்ரீ-க்கு இறுகப்பற்று பட தயாரிப்பாளர் முறையான சம்பளம் கொடுக்காததுதான் அவரின் இந்த நிலைமைக்கு காரணம் என சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ ஸ்ரீ-யின் உடல் நலத்தில் உண்மையிலேயே எனக்கும் அக்கறை உள்ளது. நீண்ட நாள்களாக நானும், அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் ஸ்ரீ-யை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகிறோம். இதனிடையே பல ஊகங்கள் உருவாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
பழையபடி ஸ்ரீயை ஆரோக்கியமாக மீட்டு வருவதே என்னுடைய முதல் நோக்கம்” உருக்கமாக கூறியதுடன் “உண்மை என்னவெனத் தெரியாமல் கருத்துகளையும் கதைகளையும் எழுதுபவர்களும் ஸ்ரீயின் பாதிப்பைப் பயன்படுத்தி என்னை தாக்குபவர்கள் முதலில் தங்களை கவனிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.