“எனக்கும் கலகலப்பாக படம் எடுக்க ஆசை தான்” - இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி!
தனக்கு கலகலப்பாக படம் எடுக்க ஆசை என்றும், ஆனால் வாழை போன்ற படங்களை எடுப்பதற்கு ஒரு சில இயக்குனர் தான் இருக்கிறார்கள் என்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதனை கொண்டாடும் விதமாக சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் பட குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதில் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகை திவ்யா துரைசாமி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ்,
“இந்த படம் திரைக்கு வருமா? வராதா? என்று நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இந்த கதையை படமாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எடுத்த படம் வாழை. சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் கதை நன்றாக இருந்தால் கொண்டாடப்படும் என்பதற்கு உதாரணமாக வாழை அமைந்துள்ளது. வாழையை தன் சொந்தக் கதையாக மாற்றிக் கொண்ட அனைவருக்கும் படக்குழுவின் சார்பாக நன்றி.
பரியேறும் பெருமாள் படம் திரைக்கு வந்து பத்து நாட்கள் கழித்து இயக்குனர் பாலா போன் செய்தார். அலுவலகத்திற்கு வர முடியுமா என கேட்டார். நானும் சென்றேன். பேசிக்கொண்டே இருந்தார். திடீரென 5 பவுன் செயினை எடுத்து போட்டு விட்டார். அந்த அறையில் யாருமே கிடையாது. நானும் அவர் மட்டும்தான் இருந்தோம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனக்கு செய்யவேண்டும் என தோணியது, செய்தேன் என்று கூறினார்.
அதன்பிறகு எங்காவது பார்த்தால் மட்டும் பேசிக்கொள்வதுண்டு. அதேபோல தான் வாழை படம் பார்த்துவிட்டு அந்த முத்தம், அரவணைப்பு எல்லாமே இயல்பாக நடந்தது. அந்த முத்தத்திற்கும், மௌனத்திற்கும் இடையே நிறைய வார்த்தைகள் உள்ளது” என தெரிவித்தார்.
பின்னர் பொதுவாக இயக்குநர் மணிரத்னம் எந்த இயக்குநர் படத்தையும் பெருமையாக பேச மாட்டார். ஆனால் உங்கள் படத்தை பற்றி பேசி இருக்கிறார் என மாரி செல்வராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு தெரியாதுங்க, என் படத்தை பற்றி எப்போதும் பேசி இருக்கிறார். எல்லா படத்துக்கும் பேசி இருக்கிறார்” என மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து, வாழை திரைப்படத்தில் சில இடங்களில் இசையமைப்பாளர் தேவா பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உரிமம் பெற்றீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த மாரி செல்வராஜ், “அந்த பாடலுக்கு தான் டான்ஸ் ஆடினேன். அந்த பாடல் எனக்கு மிகவும் நெருக்கமான பாடல். மற்றவர்களுக்கு கேட்கும் பொழுது வெறும் பாடலாக தெரிகிறது. ஆனால் என் வாழ்க்கையில் அந்த பாடல் பிணைந்துள்ளது. பஞ்சுமிட்டாய் பாடல் என் வாழ்க்கையில் முக்கியமான பாடல். அதேபோல அந்த பாடலுக்கான உரிமம் யாரிடம் இருக்கிறது என்பதை விசாரித்து அந்த உரிமத்தை பெற்றுதான் அந்த பாடலை படத்தில் பயன்படுத்தி உள்ளோம்.
மற்ற படங்கள் பார்த்துவிட்டு பேசுவது போல் இந்த படத்தை பற்றி யாரும் பேசவில்லை, அமைதி முத்தங்கள், அரவணைப்பு இது மட்டும் தான் இருந்தது. வாழைப்பழம் பார்த்துவிட்டு அனைவருமே பாராட்டினார்கள்” என தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி பாராட்டினாரா? என்ற கேள்விக்கு இயக்குநர் மாரி செல்வராஜ், “மாமன்னன் வெளியாவதற்கு முன்பே மாரியின் சிறந்த படம் வாழை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதை யாரும் கவனிக்கவில்லை. முதன் முதலில் ட்வீட் போட்டவர் உதயநிதி தான். அதேபோல் வாழை படப்பிடிப்பு தளத்திற்கும் வந்தார். படப்பிடிப்பை தொடங்கி வைத்தவரும் அவர்தான். எனக்கும் கலகலப்பாக படம் எடுக்க ஆசை தான். ஆனால் கலகலப்பான படங்களை எடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். இது போன்ற படங்களை எடுப்பதற்கு ஒரு சில இயக்குனர் தான் இருக்கிறார்கள்” இவ்வாறு தெரிவித்தார்.