For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயிற்றில் குட்டி இருப்பது தெரியாமல் பெண் யானைக்கு ஹைட்ரோ தெரபி சிகிச்சை... 12 மாத குட்டி உயிரிழப்பு!

மருதமலை அடிவாரத்தில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் இருந்த 12 மாத குட்டி யானையும் உயிரிழப்பு...
12:48 PM May 21, 2025 IST | Web Editor
மருதமலை அடிவாரத்தில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் இருந்த 12 மாத குட்டி யானையும் உயிரிழப்பு...
வயிற்றில் குட்டி இருப்பது தெரியாமல் பெண் யானைக்கு ஹைட்ரோ தெரபி சிகிச்சை    12 மாத குட்டி உயிரிழப்பு
Advertisement

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப்பகுதியில் கடந்த 17ம் தேதியன்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவை வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வந்தனர்.

Advertisement

அப்போது தாய் யானை உடல்நலக் குறைவு காரணமாக தரையில் படுத்து விட்டது. இதனால் குட்டி யானை செய்வதறியாது பரிதவித்து நின்றது. வனத்துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கால்நடை மருத்துவ குழுவினரும், கோவை வனக் குழுவினரும் இணைந்து தாய் யானையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். குட்டி யானை யாரையும் நெருங்க விடாமல் விரட்டியதால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்ட ஒரியன் என்ற கும்கி யானை உதவியுடன் குட்டி யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து படுத்துக் கிடந்த தாய் யானையை நிற்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக, கும்கி யானை உதவியுடன் கிரேன் மூலம் யானை தூக்கி நிறுத்தப்பட்டது. பின்னர் உணவு மற்றும் மருந்துகள் அளித்து அந்த யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று நான்காவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சோர்வாக காணப்பட்ட யானைக்கு நரம்பு வழி சிகிச்சை மற்றும் ஊசி மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பசும்தீவனம், பழங்கள், களி மற்றும் தண்ணீர் ஆகியவை உணவாக கொடுக்கப்பட்டது. அப்போது ஓரளவு தண்ணீரை குடித்த அந்த யானை, சிறிதளவு பழங்களை உட்கொண்டது. பின்னர் செயற்கை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு கிரேன் மற்றும் கும்கி யானை உதவியுடன், அதற்குள் அந்த யானையை இறக்கி ஹைட்ரோதெரபி என்ற சிகிச்சையை வனகால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அளித்தனர்.

ஆனால் சில மணி நேரங்களில் காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. அந்த யானையின் உயிரிழப்பிற்கு மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக இருக்கலாம் எனவும், முழுமையான காரணங்கள் உடற்கூராய்விற்கு பின்னரே தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்த பெண் யானைக்கு உடற்கூராய்வு
செய்யப்பட்டது. அப்போது அதன் வயிற்றில் இருந்த 12 மாதமான ஆண்குட்டி யானையும் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் பெண் யானையின் வயிற்றில் அதிகளவிலான பிளாஸ்டிக்கள் இருந்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து பெண் யானையின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனகால்நடை மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர். தாய் யானையும் , அதன் வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், யானையின் வயிற்றில் குட்டி இருந்தது தெரியாமல் ஹைட்ரோ தெரபி சிகிச்சையளித்தாக
வன உயிரின ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement