ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி!
ராஜஸ்தானை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஹைதராபாத் அணி.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல மைதானங்களில் நடைபெற்று வந்த போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (மே 26) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று (மே 24) நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 34 ரன்கள் மற்றும் அபிஷேக் ஷர்மா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு175 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் சார்பில் டிரென்ட் போல்ட், அவேஷ் கான் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெயதேவ் உனத்கட் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தரப்பில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லெர் கேட்மோர் முதலில் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக அடித்து விளையாட, டாம் கோஹ்லெர் நிதானமாக விளையாடினார்.
டாம் கோஹ்லெர் 16 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து, சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தார். மறுமுனையில் ஆடிய ஜெய்ஸ்வால், 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ரியான் பரக் களமிறங்கினார். சஞ்சு சாம்சன் 10 ரன்னிலும், ரியான் பரக் 6 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.