#Hyderabad | விநாயகர் சிலை கையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு - ரூ.1.87 கோடிக்கு ஏலம்!
ஹைதராபாத்தில் விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு பிரசாதம் ரூ.1.87 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை 5 மணி முதலே விநாயகர் சிலைகளை பல பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று அங்குள்ள ஹுசைன் சாகர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் கரைக்கப்பட்டன. ஹைரதாபாத், பாலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த மிக உயரமான விநாயகர் சிலைகள் உட்பட சுமார் ஒரு அடிஉயரம் உள்ள சிலைகள் வரை பொதுமக்கள் உற்சாகமாக அவரவர் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு சென்று ஏரிகளில் கரைத்தனர்.
மிகப்பெரிய விநாயகர் சிலைகளை கரைக்க ராட்சத கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் ஹைரதாபாத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு வந்தபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கணபதி பப்பா மோரியா’ என கோஷமிட்டபடி சாலைகளில் திரண்டனர். பின்னர், ஹுசைன் சாகரில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை விடிய, விடிய சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்பட்டன. 25 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில், ஹைதராபாத் பண்ட்ல கூடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு பிரசாதம் நேற்று (செப். 17) ஏலம் விடப்பட்டது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிரேட்டர் கம்யூனிட்டியினர் ஒன்று சேர்ந்து ரூ.1.87 கோடிக்கு லட்டு பிரசாதத்தை ஏலத்தில் எடுத்தனர். கடந்த ஆண்டு இதேபோன்ற லட்டு ரூ.1.26 கோடியை ஈட்டியது. 2022ல் ரூ.60 லட்சத்துக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.