திருமணம் தாண்டிய உறவில் இருந்த மனைவி... உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்!
இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் (47). இவர் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுனிதா (45). இவர்களுக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தைகள் இல்லை. இச்சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெஞ்சமின் அரபு நாட்டிற்கு கொத்தனார் வேலைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில், தனிமையில் வசித்து வந்த மனைவி சுனிதாவின் வீட்டிற்கு அடிக்கடி ஒருவர் வந்து சென்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் சுனிதாவிடம் கேட்டபோது, அவர் தூரத்துமுறை அண்ணன் என மழுப்பலாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் நடந்த சம்பவத்தை பெஞ்சமினிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெஞ்சமின் அவரது மனைவி சுனிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டில் இருந்து சுனிதா மாயமாகி உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் காணாததால், வெளிநாட்டில் இருக்கும் கணவர் பெஞ்சமினுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெஞ்சமின், கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய கையோடு, மனைவி சுனிதா காணாதது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இரணியல் போலீசார் சுனிதாவை கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்தபோது, காவல் நிலையம் வந்த சுனிதா என் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கணவர் பெஞ்சமின் தனது வீட்டில் விஷம் அருந்தி விட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெஞ்சமின் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இச்சம்பவம் குறித்து அவரது சகோதரர் ஜோசப்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.