மக்களவை தேர்தலில் நேருக்கு நேர் களமிறங்கும் கணவன்,மனைவி - உத்தரப்பிரதேசத்தில் சுவாரசியம்!
உத்திரப் பிரதேசத்தில் கணவர் போட்டியிடும் அதே தொகுதியில் அவரை எதிர்த்து மனைவியும் போட்டியிடுவது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி முதல்கட்டமாக 21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து ஏப். 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் உத்தரப்பிரதேசம் முக்கியமானதாகும்.
இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா தொகுதியில் நடப்பு எம்பியான ராம் சங்கர் கத்தேரியா இந்த முறையும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதே தொகுதியில் அவரது மனைவி மிர்துளா கத்தேரியா சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். இன்று எட்டாவா தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு ராம் சங்கர் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அவரது மனைவி மிர்துளா அதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போதும் சர்மிளா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அதனைத் திரும்ப பெற்றார். இதனால், சென்றமுறை போலவே, இந்த முறையும் வேட்புமனுவை திரும்ப பெறுவீர்களாக என கேட்கப்பட்ட கேள்விக்கு,
இந்த முறை திரும்ப பெறுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இது ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் சுதந்திரமானவர்கள். யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் என் கணவருக்கு எதிராக நிற்கிறேன். அவர் எனக்கு எதிராக போட்டியிடுகிறார்" எனத் தெரிவித்துள்ளார். ராம் சங்கர் எட்டாவா தொகுதியில் இதோடு மூன்றாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் மத்திய அமைச்சராக இருப்பதும் குறிப்பிடதக்கது.