அமெரிக்காவை தாக்கிய #HurricaneMilton - உயிரிழப்பு 16ஆக உயர்வு!
மில்டன் புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மில்டன் என்னும் பயங்கர புயல் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை தற்போது தாக்கியுள்ளது. ஃப்ளோரிடாவில் ஏற்கனவே ஹெலன் புயல் தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள், தற்போது மில்டன் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு புயல் தாக்கத் தொடங்கியுள்ளது.
மணிக்கு 120 கி.மீ வேகத்திற்கு புயல் வீசியுள்ளது. மில்டன் புயல் மிகப்பெரியதாக இருக்கும் என்று ஏற்கெனவே கணித்ததையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புயலால் வெள்ளம், நிலச்சரிவு, பொருட்சேதம், உயர்சேதங்கள் கடுமையான அளவில் ஏற்பட்டுள்ளன.
தற்போதுவரை இந்த புயலால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகமாகும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஃப்ளோரிடா மாநில மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.