நூற்றுக்கணக்கான சோதனைகளால் சந்திராயன் 3 வெற்றி! - திட்ட இயக்குநர் வீர முத்துவேல் பேச்சு!
ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான சோதனைகளே சந்திராயன் 3 வெற்றிக்கான முக்கிய காரணம் என்று அதன் திட்ட இயக்குநர் வீர முத்துவேல் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள சவிதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவனர் தினவிழா நடைபெற்றது. இதில் கல்வி குழுமத்தை சேர்ந்த மருத்துவம், பொறியியல், சட்டம் என பல்வேறு துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் கல்வி, விளையாட்டு, தொழில்துறையில் சாதித்த 5 பேருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அப்போது மேடையில் வீர முத்துவேல் பேசுகையில், சந்திராயன் மூன்று எவ்வாறு வெற்றி பெற்றது என்பது குறித்தும் , அதில் இருந்த சவால்கள் குறித்தும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார். ஆய்வகத்தில் 100க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்திய பின்னரே சந்திராயன் மூன்று விண்ணில் ஏவப்பட்டதாக அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்:திரைப்படமாகிறது டெஸ்லா CEO, எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு!
நிலவைப் போலவே பூமியில் சுற்றுச்சூழலை உருவாக்கி அதில் சோதனை செய்யப்பட்டதாகவும், இது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, கல்லூரியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம், பொறியியல், சட்டக்கல்லூரி, கலை என பல்வேறு துறையை சார்ந்த 15 கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் செயல்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது என திட்ட இயக்குனர் வீர முத்துவேல் தெரிவித்தார்.