மனித உரிமை குறும்பட விருதுகள் : வெற்றியாளர்களை அறிவித்தது NHRC!
தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2015ம் ஆண்டு முதல் குறும்பட விருதுகளை வழங்கி வருகிறது. இந்த குறும்பட விருதுத் திட்டத்தின் நோக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும், குடிமக்களின் சினிமா மற்றும் படைப்பாற்றல் முயற்சிகளை ஊக்குவிப்பதும், அங்கீகரிப்பதும் ஆகும்.
2024ம் ஆண்டுக்கான குறும்பட விருதுகளின் பத்தாவது பதிப்பிற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு இந்திய மொழிகளில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பெறப்பட்ட மொத்தம் 303 குறும்படங்களை ஆய்வு செய்த பிறகு, 243 படைப்புகள் விருதுகளுக்காகப் போட்டியிட்டன.
இந்நிலையில் ‘மனிதன்’ என்ற உரிமைகள் குறித்த பத்தாவது வருடாந்திர குறும்படப் போட்டியின் 7 வெற்றியாளர்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. 303 படைப்புகளில் இருந்து குறும்படத்திற்கான 7 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
ஜம்மு-காஷ்மீரிலிருந்து நதி நீர் மாசுபாடு குறித்த ஆவணப்படம், ‘தூத் கங்கா - பள்ளத்தாக்கின் இறக்கும் உயிர்நாடி’ (‘Doodh Ganga- Valley’s dying lifeline) என்ற குறும்படம் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் மற்றும் கல்வி குறித்த ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘உரிமைகளுக்கான போராட்டம்’ (‘Fight for rights’) என்ற குறும்படம் இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குடிநீரின் மதிப்பு குறித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.ரவிச்சந்திரன் என்பவரது ‘கடவுள்’ (GOD ) என்ற குறும்படம் மூன்றாம் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு விருதுக்காக நான்கு குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த நான்கு படங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். செல்வம் என்பவரது ‘விலையில்லா பட்டாதாரி (மலிவான பட்டதாரி)’ என்ற குறும்படத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
இந்தப் படம் வயதானவர்களின் கவலைகள் மற்றும் உரிமைகளை எடுத்துக்காட்டுகிறது. விருது வழங்கும் விழா பின்னர் ஏற்பாடு செய்யப்படும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.