For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வீர்கள்? பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

05:03 PM May 23, 2024 IST | Web Editor
எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வீர்கள்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார்,  என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

குண்டர் தடுப்புச் சட்டம்:

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4-ம் தேதி,  யூடியூபரான சவுக்கு சங்கரை,  கோவை போலீஸார் தேனியில் வைத்து கைது செய்தனர்.  அப்போது கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து,  சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்கொணர்வு மனு:

இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அதில், ‘போலீஸார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எனது மகன் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாக பதிவு செய்து, ஒவ்வொரு நீதிமன்றமாக ஆஜர்படுத்தி வருகின்றனர்.

காவல் துறையால் தாக்கப்பட்டதால் கை மற்றும் பல்வேறு இடங்களில் காயம் அடைந்துள்ள எனது மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை.  போலீஸாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனது மகன் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். எனவே,  எனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

விசாரணை ஒத்திவைப்பு:

இந்த மனுவை இன்று காலை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு,  சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.  அதன்படி இந்த வழக்கு, பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.  அந்த ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கை நாளை (மே 24) விசாரிப்பதாகக் கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.

கோவை சிறையில் தாக்கப்பட்டதாக புகார்:

இதேபோல்,  கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையையும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

பிரமாணப் பத்திரம்... 

அப்போது,  எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  தமிழ்நாடு முதல்வரை ஒருமையில் அழைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும்,  இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதால்,  இன்று மாலையே சிறையில் உள்ள அவரை சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டனர்.

அவசரம் ஏன்?

அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அவ்வளவு அவசரம், அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசரம் என்ன? நாளைக்கே இந்த வழக்கில் இறுதி விசாரணை மேற்கொள்ள அப்படி என்ன சிறப்பு உள்ளது?”என்று கேள்வி எழுப்பினார்.  ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Tags :
Advertisement