For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோலிவுட்டுக்கு வந்த சோதனை - "2024"ல் தமிழ் சினிமாவில் இவ்வளவு நஷ்டமா?

01:03 PM Dec 31, 2024 IST | Web Editor
கோலிவுட்டுக்கு வந்த சோதனை    2024 ல் தமிழ் சினிமாவில் இவ்வளவு நஷ்டமா
Advertisement

தமிழ் சினிமாவில் 2024 ம் ஆண்டு வெளியான 241 திரைப்படங்களில் 93 சதவீத திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

2024ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் வசூல் சாதனையைக் குவிக்கும் என ஆண்டின் ஆரம்பத்தில் திரையுலகினர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் தமிழில் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இந்த வருடத்தின் கடைசி வாரமான கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களின் எண்ணிக்கையையும் சேர்த்து 2024-ம் ஆண்டு, 241 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட திரைப்படங்களின் வசூல் ஏமாற்றத்தைத் தரும் விதத்தில்தான் இருந்தன. ஒரு சில படங்களைத் தவிர நிறைய படங்கள் தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் நல்ல வசூலை பெற்று கொடுத்தது 20 படங்கள் வரை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் மெகா பட்ஜெட், மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் அடங்கும்.

இந்த நிலையில் 2024-ல் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தி கோட், இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய 4 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் ‘தி கோட்’ மட்டுமே பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட, கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம், மெர்ரி கிறிஸ்துமஸ், ரத்னம், ராயன், தங்கலான், அமரன், விடுதலை 2 ஆகிய 9 படங்களில், ‘ராயன்’ மற்றும் ‘அமரன்’ மட்டுமே பெரும் வெற்றியை பெற்றது.

மேலும் ரூ.25 கோடியில் இருந்து ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவான சைரன், அரண்மனை 4, மகாராஜா, மெய்யழகன், பிரதர் ஆகிய 5 திரைப்படங்களில் மகாராஜா, அரண்மனை 4 படங்கள் மட்டுமே மெகா வெற்றியை பெற்றன. இதில் கிராமத்து கதையம்சம் கொண்ட மெய்யழகன் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து ரூ.15 கோடியில் இருந்து ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான மிஷன் சாப்டர் 1, கருடன், சிங்கப்பூர் சலூன், ஜோஷ்வா, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் கருடன் திரைப்படம் மட்டுமே சூப்பர் ஹிட்டானது.

இதற்கடுத்து ரூ.8 கோடியில் இருந்து ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி, ரோமியோ, ஸ்டார், இங்க நான்தான் கிங்கு, பிடி சார், அந்தகன், டிமான்டி காலனி 2, ஹிட்லர், வாழை, கடைசி உலகப் போர், வெப்பன், ஜாலியோ ஜிம்கானா, பிளடி பெக்கர், நிறங்கள் மூன்று, சொர்க்கவாசல், மிஸ் யூ உள்ளிட்ட 16 திரைப்படங்களில் டிமான்டி காலனி 2, வாழை, ரோமியோ, ஸ்டார், பிடி சார், அந்தகன் ஆகிய படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் ரூ.5 கோடியில் இருந்து ரூ.8 கோடி பட்ஜெட்டில் 16 திரைப்படங்களும், ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரையிலான பட்ஜெட்டில் 45 படங்களும், ரூ.3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் 141 திரைப் படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் பிளாக், லப்பர் பந்து, லவ்வர், பேச்சி உள்ளிட்ட திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் ரூ.3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான 141 திரைப்படங்களில் ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில், குரங்கு பெடல், ஜமா, நண்பன் ஒருவன் வந்தபிறகு, ராக்கெட் டிரைவர், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் ஆகிய திரைப்படங்கள் கவனிக்கப்பட்டாலும் பெரிய வெற்றியை பெறவில்லை என்றும் திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே, 2024 ல் வெளியான 241 திரைப்படங்களில் ஏழு சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் 93% படங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement