Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவரான அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? - அதன் நடைமுறை என்னென்ன?

கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்... அதன் நடைமுறை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்...
08:30 PM Apr 21, 2025 IST | Web Editor
Advertisement

கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ள நிலையில், போப்பின் இறுதிச் சடங்கு முடிந்து இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகு, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் ஒரு ரகசியச் செயல்முறை தொடங்கும். இதற்காக கார்டினல்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் கூடுவார்கள். புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறை ரகசியமாகவே நடைபெறும். அனைத்து கார்டினும் ரகசியப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

புதிய போப்பை தேர்வு செய்யும் பணிகளைச் செய்யும் இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் மிக மூத்த அதிகாரிகளாக இருப்பார்கள். ஆங்கிலத்தில் College of Cardinals எனக் குறிப்பிடுவார்கள். இவர்கள் அனைவருமே நேரடியாக மறைந்த போப்பால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் பொதுவாக பிஷப்களாக இருப்பார்கள். இப்போது மொத்தம் 252 கத்தோலிக்க கார்டினல்கள் உள்ளனர். அவர்களில் 138 பேர் புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். மற்றவர்களுக்குத் தகுதி இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு 80 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். 80 வயதைத் தாண்டிய கார்டினல்கள் புதிய போப்பை தேர்வு செய்யும் விவாதத்தில் பங்கேற்கலாம் என்ற போதிலும் அவர்களால் வாக்களிக்க முடியாது.

போப் உயிரிழக்கும்போது கார்டினல்கள் வாடிகனில் கூடுவார்கள். அங்கு தான் conclave எனப்படும் போப்பை தேர்வு செய்யும் நடைமுறை நடக்கும். போப் மரணத்திற்கும் அடுத்த போப் தேர்வு செய்யப்படுவதற்கும் இடையிலான காலத்தில், கார்டினல்கள் அமைப்பு தான் திருச்சபையை நிர்வகிக்கும். சிஸ்டைன் சேப்பலுக்குள் தேர்தல் மிகவும் ரகசியமாக நடத்தப்படுகிறது. கார்டினல்களில் ஒருவர் புதிய போப்பாக தேர்வு செய்யப்படுவார்.

ஒவ்வொரு கார்டினல்களும் தனித்தனியாக வாக்களிப்பார்கள். பிறகு அந்த வாக்கு எண்ணப்படும். மொத்த வாக்குகளில் 3-ல் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றால் மட்டுமே ஒரு போப் தேர்வு செய்யப்பட்டதாகக் கருதப்படும். இந்தச் செயல்முறைக்கு பல நாட்கள் ஆகலாம். போப் பிரான்சிஸ் கடந்த 2013-ல் தேர்வு செய்யப்பட்டபோதும் இரண்டு நாட்கள் தேர்தல் நடந்தது. அப்போது மொத்தம் 115 கார்டினல்கள் வாக்களித்த நிலையில், அதில் ஐந்தாம் சுற்றின் முடிவில் போப் பிரான்சிஸிற்கு 90 வாக்குகள் கிடைத்தது. ஆனால், முந்தைய நூற்றாண்டுகளில் போப் தேர்வு செய்வதற்கான செயல்முறை வாரங்கள் அல்லது மாதங்கள் கூட நீடித்தது. சில சமயங்களில் கார்டினல்கள் இந்தத் தேர்வு செயல்முறையின்போது போது கூட இறந்துள்ளனர். அந்தளவுக்குப் பெரிய ஒரு நடைமுறையாகவே இருந்துள்ளது.

போப் தேர்வு செயல்முறை நடக்கும்போது சிஸ்டைன் தேவாலயத்தில் வெளியாட்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. கார்டினல்களின் வாக்குச் சீட்டுகளை எரிக்கும்போது தினசரி வெளியாகும் இரு புகைகளை வைத்தே போப் தேர்வு செயல்முறை குறித்து மக்களால் தெரிந்து கொள்ள முடியும். அதாவது கருப்பு நிறத்தில் புகை வந்தால் போப் தேர்வு செயல்முறை இன்னும் முடியவில்லை என அர்த்தம். வெள்ளை புகை என்பது புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

பொதுவாகப் புதிய போப் தேர்வான உடன் ஒரு மணி நேரத்திற்குள் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தை நோக்கி உள்ள பால்கனியில் தோன்றுவார். அங்கிருந்தபடி அவர் மக்களைச் சந்திப்பார். தேர்தல் செயல்முறையில் பங்கேற்கும் மூத்த கார்டினல் ஒருவர், "ஹேபமஸ் பாப்பம்" (Habemus Papam") என லத்தீன் மொழியில் அறிவிப்பார். இதற்கு "நமக்கு ஒரு போப் கிடைத்துவிட்டார்" என்று அர்த்தமாகும்.

பின்னர் அவர் புதிய போப்பை அறிமுகப்படுத்துவார். அப்போதுதான் தேர்வான போப்பிற்கு புதிய பெயர் வழங்கப்படும். உதாரணமாக, போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. ஆனால், போப்பாக தேர்வான பிறகு, அசிசியின் புனித பிரான்சிஸின் நினைவாக பிரான்சிஸ் என்ற பெயரை அவர் தேர்வு செய்து கொண்டார்.

பொதுவாக ஞானஸ்நானம் பெற்ற எந்தவொரு கத்தோலிக்க ஆணும் போப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும், நடைமுறையில் கார்டினல்கள் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். கடந்த 2013ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தென் அமெரிக்காவில் இருந்து தேர்வான முதல் போப்பாண்டவர் என்ற பெருமையைப் பெற்றார். உலகின் ஒட்டுமொத்தக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சுமார் 28% பேர் தென் அமெரிக்காவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் கார்டினல்கள் ஐரோப்பியர், அதிலும் குறிப்பாக இத்தாலி நாட்டை சேர்ந்தவரே போப்பாக அதிகம் தேர்வாகியுள்ளனர். இன்றுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 266 போப்புகளில் 217 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்த முறை அது மாறலாம். ஏனென்றால் இப்போதுள்ள கார்டினல்களில் உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கிறது. குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து அதிகப் பிரதிநிதித்துவம் இருக்கிறது.
திருச்சபையில் உலகெங்கிலும் இருந்து பிரதிநிதித்துவம் தேவை எனப் போப் பிரான்சிஸ் கருதிய நிலையில், அதற்கேற்பவே அவர் கார்டினல்களைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கார்டினல் மைகோலா பைச்சோக் என்பவர் (45) குறைந்த வயதான கார்டினலாக இருக்கிறார். இந்த முறை இதுபோல உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கார்டினலாக இருப்பதால் இந்த முறை ஆப்பிரிக்கா அல்லது ஆசிய நாட்டில் இருந்து கூட ஒருவர் போப்பாக தேர்வாக வாய்ப்புகள் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

Tags :
Cardinalsconclave processNext popePope FrancisRIP pope francisVatican
Advertisement
Next Article