4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் CEO, கொலையை எப்படி திட்டமிட்டார்? வெளியான அதிர்ச்சி தகவல்!
4 வயது மகனை கொன்ற பெங்களூருவை சேர்ந்த பெண் CEO, கொலை செய்யும் முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பி அவரை எப்படி திசைதிருப்பினார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் ஸ்டாா்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரியும் சுசனா சேத் (39) என்ற பெண் திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-இல் கணவர் வெங்கட்ராமனை பிரிந்தார். இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி (06.01.2024) தனது 4 வயது மகனுடன் கோவா சென்று அங்குள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ளாா். அங்கு 3 நாள்கள் தங்கியிருந்த பிறகு கோவாவிலிருந்து பெங்களூருக்கு காரில் செல்ல, வாடகைக் காா் ஏற்பாடு செய்து தருமாறு விடுதியினரிடம் கேட்டுள்ளாா்.
வாடகைக் காா் பயணம் விமானத்தில் செல்வதைவிட மிகவும் அதிகம் என்று விடுதியாளா் கூறியும் வாடகைக் காா் தான் தேவை என சுசனா வலியுறுத்தியிருக்கிறார். எனினும் அந்த காரில் மகன் இல்லாமல் அவா் பெங்களூரு புறப்பட்டாா். இதனால் சந்தேகமடைந்த விடுதியாளா், அவா் தங்கியிருந்த அறைக்குச் சென்று பாா்த்த போது ரத்தக் கறை இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு விடுதியாளா் விரைந்து தகவல் அளித்தாா். இதற்குள் கோவா எல்லையைக் கடந்து கா்நாடகத்துக்குள் காா் சென்றுவிட்ட நிலையில், சுசனா சென்ற வாடகைக் காரின் ஓட்டுநருடன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய காவல்துறையினர், அருகில் உள்ள காவல் நிலையத்துக்குள் காரை ஓட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.
காவல் நிலையத்தில் சுசனா சேத்தின் உடைமைகளை சோதனை செய்தபோது, பெட்டியில் 4 வயது மகனின் உடல் இருந்தது கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, சுசனா சேத்தை கா்நாடக மாநிலம் சித்ரதுா்கா காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து கோவாவுக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவலில் எடுத்தனர்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், விவாகரத்து வழக்கின் தீர்ப்பில், மகனை சந்திக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தந்தைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த சுசனா, மகனை தந்தை சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், விவாகரத்து வழக்கின் தீர்ப்பில், மகனை சந்திக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தந்தைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து, சுசனாவின் கணவர் வெங்கட்ராமன் வெளிநாடு சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து தனது மகனுடன் வீடியோ காலில் மட்டும் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி (07.01.2024) பெங்களூருக்கு வந்து நேரில் மகனை சந்திக்க இருந்திருக்கிறார். இது தொடர்பாக எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்பது குறித்து தனது முன்னாள் கணவன் வெங்கட்ராமனுக்கு சுசனா மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
ஆனால் தனது குழந்தையை வெக்ட்ராமன் சந்திப்பதை விரும்பாத சுசனா 6-ஆம் தேதியே மகனை அழைத்துக் கொண்டு கோவா சென்றுவிட்டார். 7-ஆம் தேதி ஞாயிறு அன்று மகனை சந்திக்க ஆசையுடன் பெங்களூரு வந்த வெங்கட்ராமன் சுசனாவுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். தொலைபேசியிலும் அழைத்திருக்கிறார். ஆனால் அழைப்பை ஏற்காததோடு, முன்னாள் கணவரின் மெசேஜிற்கும் பதில் அளிக்காமல் சுசனா தவிர்த்திருக்கிறார். அதோடு மகனை விடுதியில் வைத்தே கொலை செய்திருக்கிறார். விவகரத்து பெற்ற கணவன் மீதிருந்த கோபம், பெற்ற மகனை தாயே கொலை செய்யும் அளவுக்கு சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.