“வீடுகளைவிட குடியுரிமையே முக்கியம்” - புழல் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் ஆதங்கம்!
“நான், மகன், பேரன் என அனைத்து தலைமுறையினரும் அகதிகளாகவே வாழ்கிறோம். அப்படி இருக்கையில் எவ்வாறு முதலமைச்சருக்கு தொப்புள் கொடி உறவாகுவோம். மன உளைச்சலில் தான் இங்கு வாழ்கிறோம்” என இலங்கை மறுவாழ்வு மையத்தில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை புழல் காவாங்கரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில், ரூ.2,30,50000 மதிப்பீட்டில் 40 பேருக்கு மறுவாழ்வு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை எம்எல்ஏ மாதவரம் சுதர்சனத்துடன், சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் துறை அமைச்சர் சா.மு நாசர் ஆய்வு செய்தார்.
அதிகாரிகளிடம் விரைந்து அனைத்து குடியிருப்புகளையும் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வலியுறுத்தினார். பின்னர் 40 பேருக்கு வீடு கட்டும் ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த 2022ஆம் ஆண்டு 7469 வீடுகள் கட்டுவதற்கு ரூ.176 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 3510 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 3510 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக புழல் காவாங்கரையில் 40 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்படும். சுய உதவி குழுக்கள், கல்வி உதவி, இளைஞர் நலன் அடிப்படை தேவைகளுக்கு உதவி என அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மைய வீட்டில் இருக்கும் மக்களை கண்ணின் இமைபோல் காத்து
வருகிறார்” என தெரிவித்தார். இதுதொடர்பாக இலங்கை முகாம்வாசிகள் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
“இலங்கை அகதிகள் முகாம் என கொடுக்கப்பட்டதை, மறுவாழ்வு மையம் என மாற்றினார்கள். நாங்கள் 35 ஆண்டுகளாக அகதிகள் முகாமில்தான் உள்ளோம். நாங்கள் தொப்புள் கொடி உறவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அகதிகளாக இருக்கும் நாங்கள் எவ்வாறு தொப்புள் கொடி உறவாகுவோம்? குடியுரிமை கொடுத்துவிட்டு தொப்புள் கொடி உறவு என கூறவேண்டும். அவர்களின் இனமாக எங்களை நினைத்திருந்தால் எப்போதோ குடியுரிமை வழங்கப்பட்டிருக்கும்.
குடியுரிமை இல்லாமல் எங்கள் தலைமுறையினருக்கு அரசு வேலை கிடைக்காது. நான், மகன், பேரன் என அனைத்து தலைமுறையினரும் அகதிகளாகவே வாழ்கிறோம். அப்படி இருக்கையில் எவ்வாறு தொப்புள் கொடி உறவாகுவோம். மன உளைச்சலில் தான் இங்கு வாழ்கிறோம்” என தெரிவித்தனர்.