For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி - ஒரு மினி ரிவ்யூ!

இந்த வாரம் வெளியான 4 திரைப்படங்களின் விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:12 PM Sep 21, 2025 IST | Web Editor
இந்த வாரம் வெளியான 4 திரைப்படங்களின் விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி   ஒரு மினி ரிவ்யூ
Advertisement

கோலிவுட்டில் வெள்ளிக்கிழமை என்றாலே திரையரங்குகள் புதுபடங்களால் நிறையும். அந்த வகையில் இந்த வாரம் விஜய் ஆண்டனி நடித்த சக்தித்திருமகன், கவின் நடித்த கிஸ், கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் நடித்த தண்டகாரண்யம், வ.கவுதமன் இயக்கி நடித்த படையாண்ட மாவீரா படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ..

Advertisement

சக்தித்திருமகன்:

அருவி, வாழ் படங்களை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான ஒருவித அரசியல் கதை சக்தித்திருமகன். மிகப்பெரிய அரசியல் புரோக்கரான இவர், டெல்லியில் பெரும் செல்வாக்கு கொண்ட காதல் ஓவியம் சுனிலுக்கும், சென்னை தலைமை செயலகத்தில் பவர்புல் புரோக்கராக இருக்கும் விஜய் ஆண்டனிக்குமான மோதல் தான் படத்தின் கரு. டிரான்ஸ்பர், டெண்டர், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுதல் என கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் விஜய்ஆண்டனி, ஒரு விஷயத்தில் வில்லன் சுனிலுடன் மோதுகிறார். விஜய்ஆண்டனியை ஜெயிலில் தள்ளி, அவர் சம்பாதித்த 6 ஆயிரம் கோடி பணத்தை தேடுகிறார் வில்லன்.

ஜனாதிபதி ஆக நினைக்கும் வில்லன் ஆசையை தடுக்க நினைக்கிறார் ஹீரோ விஜய் ஆண்டனி. யார் ஜெயித்தார்கள் என்பது கிளைமாக்ஸ். பணம், அதிகாரவர்க்கம், அரசியல் லாபி, ஊழல், சமூகநீதி என பல விஷயங்களை படம் பேசுகிறது. புரோக்கர் கேரக்டரில் விஜய் ஆண்டனி நடிப்பு ஓகே. அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் சீன்கள் ரசிக்கும்படி இருக்கிறது. வில்லனாக நடித்துள்ள காதல் ஓவியம் சுனில் ஷெட்டிலான நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அவர் தோற்றம், பேச்சு சில பெரிய மனிதர்களை நினைவுபடுத்துகிறது. பிளாஷ்பேக்கில் வரும் சந்திரசேகர் கேரக்டர் மனதில் நிற்கிறது. பல படங்களில் காமெடி செய்த செல்முருகனுக்கு இதில் குணசித்திர வேடம். ஹீரோயின் திரிப்திக்கு அதிக வேலையில்லை. பாடல்கள் சுமார் ரகம். அட, அரசு துறையில் இவ்வளவு விஷயங்கள் நடக்கிறதா?

அரசியல்லாபி இவ்வளவு பவர்புல்லா? இதில் இவ்வளவு பணம் விளையாடுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது திரைக்கதை. மக்களை மறக்கடிக்க, கேள்வி கேட்க முடியாமல் தடுக்க பல விஷயங்கள் இருக்கிறது. அது உருவாக்கப்படும் என்ற கருத்து சிந்திக்க கூடியாது. ஆனால், படத்தின் பல கேரக்டர்கள் அதிகம் பேசுவது, விஜய் ஆண்டனியின் இடைவேளைக்கு பிந்தைய நடிப்பு சற்றே போரடிக்கிறது. சில கேரக்டர்கள், சில நிஜ மனிதர்களை, விஐபிகளை நினைவு படுத்துகிறது புதிது. இதுவரை யாரும் சிந்திக்காத கதை, புது கோணம். ஆனாலும், இடைவேளைக்குபின் இன்னும் எளிமையாக, இன்னும் கமர்ஷியல் கலந்து சொல்லியிருந்தால் சக்தித்திருமகன் இன்னும் பெரிதாக ரசிக்கப்பட்டு இருக்கும்.

கிஸ் :

இரண்டு ஜோடிகள் கிஸ் அடிப்பதை பார்த்தால், அபூர்வ சக்தி காரணமாக, அவர்களின் எதிர்காலம் ஹீரோ கவின் மனசுக்கு தெரியும். அந்த சக்தியால் காதல் மீது வெறுப்பாக இருக்கிறார். அவரை டான்ஸ் ஸ்டூடியோ வைத்து இருக்கும் ப்ரித்தி அஸ்ராணி காதலிக்கிறார். கிஸ் அடிக்கிறார். அப்போது அவர் மனதில் எதிர்காலம் தெரிகிறது. ஒரு விபத்தில் ப்ரீத்தி இறந்துவிடுவார் என்பதை தெரிந்து கொள்வார் ஹீரோ. அவர் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ஒதுங்கி செல்கிறார். அந்த காதல் ஜெயித்ததா? விபத்தில் இருந்து மீண்டாரா ஹீரோயின் என்பது கிஸ் கதை. டான்ஸ்மாஸ்டர் சதீஷ் இயக்கியுள்ளார்.

கவின் நடிப்பு, காதல் காட்சிகள், டான்ஸ் ஓகே. சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தேர்ச்சி தேவை. பக்கத்து வீட்டு பையன் மாதிரி இயல்பாக இருப்பது, பேசுவது பிளஸ். அயோத்தி படத்தில் பார்த்த ப்ரீத்தி அஸ்ராணியா என்று கேட்கும் அளவுக்கு மார்டனாக, ரொமான்ஸ், டான்சில் பின்னி எடுத்து இருக்கிறார். ஹீரோ நண்பராக வரும் ஆர்.ஜே.விஜயும் தன் பங்கிற்கு கலகலப்பு ஊட்டுகிறார். அவர் அப்பாவாக வரும் காமெடி நடிகர் விடிவி கணேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துக்கு பெரிய பிளஸ். அவர் பேச்சு, சில செயல்கள், அந்த காமெடி ஏரியா நல்ல சிரிப்பை தருகிறது.

சில சீன்களில் வந்தாலும் தேவயானி, கவுசல்யா மனதை கவர்கிறார்கள். ஜென் மார்டின் இசை உற்சாகம். கிளைமாக்சை இன்னும் உணர்ச்சி பூர்வமாக எடுத்து இருக்கலாம். கிஸ் பவருக்கு பின்னால் இருக்கும் அந்த ராஜா கதை, அதை சொல்லும் பிரபு கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கிறது. முதற்பாதி மட்டும் கொஞ்சம் இழுக்கிறது. மற்றபடி, கவின், ஹீரோயின் அஸ்ராணி நடிப்பு, விடிவி கணேஷ் காமெடி, கிஸ் சம்பந்தப்பட்ட பேண்டசி சீன்களுக்காக படம் பார்க்கலாம்.

தண்டகாரண்யம்:

கிருஷ்ணகிரி காட்டுபகுதியில் பழங்குடி இன மக்களாக வசிக்கும் அண்ணன் அட்டக்கத்தி தினேஷ், தம்பி கலையரசன் கதை. அவர்களுக்கு என்ன பிரச்னை வருகிறது. அதிகார வர்க்கத்தால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காடு பின்னணியில் அழுத்தமாக உருவாகியிருக்கிறது தண்டகாரண்யம். அதியன் ஆதிரை இயக்க, நீலம் புரடக் ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது. பழங்குடி மக்களுக்காக குரல் கொடுக்கும் கேரக்டர் அட்டக்கத்தி தினேஷ். அவர் பாதிக்கப்படும்போது வெகுண்டு எழுவதும், தம்பி பாசத்தில் பல விஷயங்கள் செய்வதும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. நக்சல்களை ஒடுக்க, ராணுவம் நடத்தும் ஒரு சிறப்பு பிரிவில் சேரும் கலையரசன் தாங்கள் பலி ஆடுகள் என்பதை உணர்ந்து தவிக்கும் காட்சிகள், அந்த முகாமல் அவர் சந்திக்கும் மொழி ரீதியிலான, பயிற்சி ரீதியிலான பிரச்னைகள் பல கேள்விகளை கேட்கிறது.

அதே சமயம் ராணுவம் இப்படி எல்லாம் செய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது. கலையரசன் நண்பராக வரும் டான்சிங்ரோஸ் ஷபீர் கேரக்டர், அவர் குடும்ப பின்னணி மனதில் நிற்கிறது. கலையரசன் காதலியாக வரும் வின்சு, தினேஷ் மனைவியாக வரும் ரித்விகா, அப்பாவாக வரும் மாணிக்கம், வில்லனாக வரும் வேட்டை முத்துக்குமார் என பல கேரக்டர்கள் படத்துக்கு பலமாக இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகர் இசையும், பிரதீப்ராஜா ஒளிப்பதிவும் காட்டை, ராணுவ பயிற்சியை, அந்த மக்களின் மனநிலையை அழகாக, துயரமாக பிரதிபலிக்கின்றன. அந்த ராணுவ பயிற்சி முகாம் காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். அட்டக்கத்தி தினேஷ் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம்.

முகாம் பின்னணியை எளிமையாக சொல்லி இருக்கலாம். ஆனாலும், எளிய மக்களின் வலியை, காடு பின்னணியில் இருக்கும் அரசியலை, அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உண்மை முகத்தை, புது கோணத்தில் காண்பித்து இருக்கிறார்கள். காட்டை நம்பியிருக்கும் எளிய மக்களில் குரலாக, அதிகாரத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகள் வலியாக, சில உண்மை சம்பவங்களை கலந்து உணர்ச்சிபூர்வமாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

படையாண்ட மாவீரா:

காடுவெட்டி குருவின் வாழ்க்கையை கொஞ்சம் கற்பனை, ஹீரோயிசம் கலந்து வ.கவுதமன் இயக்கி, நடித்து இருக்கும் படம் படையாண்டமாவீரா. வட மாவட்ட பின்னணியில், குரு யார்? எப்படி வளர்ந்தார். என்ன செய்தார். எப்படி மறைந்தார் என்ற வாழ்க்கை வரலாற்றை, கொஞ்சம் கமர்ஷியல் கலந்து கொடுத்து, தானே குருவாக நடித்து இருக்கிறார் கவுதமன். அவர் நடிப்பு, ஆக்சன், அநீதிக்கு எதிராக பொங்கும் காட்சிகள் நன்றாக உள்ளது. குரு அப்பாவாக வரும் சமுத்திரக்கனியும், குரு நண்பராக வரும் மன்சூர் அலிகானும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ஹீரோயின் பூஜிதா அழகாக இருக்கிறார். அவரின் பாடல்காட்சி கலர்புல். ஜி.வி.பிரகாஷ் பாடல்கள், சாம் சி.எஸ் பின்னணி இசை, வைரமுத்து வரிகள் படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், நிலக்கரி சுரங்கம், சிமென்ட் தொழிற்சாலைக்கு எதிராக குரு போராடும் காட்சிகள், கற்பழிப்புக்கு கொடுக்கும் தண்டனை விறுவிறு. முதற்பாதியில் இருக்கும் வேகம், பின்னர் கொஞ்சம் குறைந்தாலும், கிளைமாக்ஸ் உருக்கமாக அமைகிறது. குரு அப்பா, தாத்தா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பல தகவல்களை சொல்கி்ன்றன. ராமதாஸ் ஆக வரும் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் அப்படியே பொருந்தி இருக்கிறார். குரு அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் நடிப்பு, அவர் உணர்ச்சிகரமாக பேசும் வசனங்கள் டச்சிங்காக உள்ளது. கார்ப்பரேட் வில்லன்கள், அந்த சண்டை மட்டும் படத்தை கொஞ்சம் அந்நியப்படுத்துகிறது. வாழ்க்கை வரலாற்றை ஆக்சன், எமோசனல், கோபம் கலந்து கமர்ஷியலாக சொல்லியிருப்பதால், காடுவெட்டி குரு ஆதரவாளர்களுக்கு படம் பிடிக்கும்.

சிறப்பு செய்தியாளர்: மீனாட்சிசுந்தரம்

Tags :
Advertisement