மும்பையில் ரூ.500 வாடகைக்கு வீடு! அதிலும் பூனைக்கு Share! மனிதம் காத்த இளைஞர்!
மும்பையில் சொமேட்டோ ஊழியர் ஒருவர் ரூ.500 மதிப்புள்ள வாடகை வீட்டில் வசித்துவரும் நிலையில், அங்கும் பூனைக்கு இடம் கொடுத்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் பெய்துவரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்பர் லைனில் உள்ள சுனாபட்டியில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் இயக்கம் மந்தமடைந்துள்ளது. தானே மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தானே வந்தனா பஸ் டிப்போ மற்றும் உள்ளூர் மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், மும்பை ஜொமேட்டோ ஊழியர் ஒருவர் தனது @qb_07 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பகிர்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரன்ஜாய் போர்கோய்அரி என்பவர் மாநில அளவிலான கால்பந்து வீரர் மற்றும் சிறந்த பாடகர். மும்பையில் அவர் ஒரு சிறிய அறையை மற்றொரு நபருடன் பகிர்ந்து வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது அறை குறித்த டூர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பிரன்ஜாய் அந்த வீடியோவில் மிகவும் குறுகலான ஒரு சாலையில் செல்கிறார். மிகவும் மெலிந்த உடலமைப்பை கொண்ட அவரே நேராக செல்ல முடியாத அளவுக்கு அந்த சாலை குறுகலானது. அதன் முடிவில், அதைவிட குறுகலான ஒரு இரும்பு படிகட்டு உள்ளது. அதில் ஏறிச் சென்றால் முடிவில் ஒரு சிறிய அறை. இதற்கு மாதம் ரூ.500 வாடகை. சிமென்ட் சீட்டால் மூடப்பட்ட அந்த அறையில் துணிகளும், பொருட்களும், ஒரு பூனைக்குட்டி மற்றும் இவர்கள் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோவில் தன்னால் சரியாக மூச்சுக் கூட விட முடியவில்லை என்று பிரன்ஜாய் வேதனையுடன் கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் மேலும், "இந்தப் பகுதியில் இப்படிப்பட்ட அறை கிடைப்பதே அதிசயம் தான். என்னால் எங்கள் குடும்பத்திடம் பணம் கேட்க முடியாது. அவர்கள் ஏற்கனவே எனக்காக நிறைய செலவு செய்துவிட்டார்கள். இந்த அறையில் வசிப்பதற்கு பூனைக்கு சிரமமாக தான் இருக்கும். வெளியில் விட்டால் அது உயிர் வாழ்வது கடினமாகும். எனவே அதை என் செல்லப்பிராணியாக வளர்க்க தொடங்கிவிட்டேன்." என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ சுமார் 5 லட்சம் பார்வைகளை நெருங்கிவிட்டது. அதில் பலரும் பிரன்ஜாயை பாராட்டியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த குஷி என்ற பெண் மனம் உருகி, பிரன்ஜாய்க்கு மூன்று மாதம் வீட்டு வாடகையான ரூ.1,500 கொடுத்து உதவியுள்ளார்.