ஓசூர்: சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் - கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்த நிலையில் வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு, காவிரி தெற்கு என
இரு வன உயிரின சரணாலயங்கள் உள்ளன. இந்த வன உயிரியல் பூங்காவிற்கு
ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம்
பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் வலசை
வந்து கிருஷ்ணகிரி வழியாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள வெங்கடேஸ்வரா உயிரியல்
பூங்காவிற்கு சென்று, பின்னர் அதன் சீசன் முடிந்த உடன் மீண்டும் வந்த வழியாக
கர்நாடக மாநிலத்திற்கு செல்வது வழக்கமாக உள்ளது.
இதையும் படியுங்கள்: “ஹலால் பொருள்களைத் தடை செய்யுங்கள்!” என பீகார் முதல்வருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்.பி!!
அதுபோல் கடந்தாண்டு வலசை வந்த 200-க்கும் மேற்பட்ட யானைகளை
ஜவளகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு இடம் பெயர செய்தனர். அதில் 50-க்கும்
மேற்பட்ட யானைகள் மீண்டும் திரும்பி செல்லாமல் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி
மற்றும் ஜவளகிரி வனப்பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களில் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு யானைகள் அதன் வலசை சீசனுக்கு முன்னரே வலசை தொடங்கி உள்ளது. பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து 35-க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வழியாக ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். சானமாவு, சினிகிரிபள்ளி கொம்மேபள்ளி, பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.