தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு, முறையீடு என்ற அடிப்படையில் அவசர வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் முறையீடு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் பெண் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார்.
அதில், சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும் தேசிய கொடி ஏற்றும் போது, போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். தேசிய கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம். மேலும் தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானமான விஷயம்,” என தெரிவித்தார்.