“ஹாங் ஃபு நிறுவனத்தின் தொழிற்சாலை, தமிழ்நாடு காலணி உற்பத்தித் துறையின் மற்றொரு மைல்கல்!” - அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!
ஹாங் ஃபு குழுமம் ராணிப்பேட்டையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பது, தமிழ்நாட்டின் காலணி உற்பத்தித் துறையின் மற்றொரு மைல்கல் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபு குழுமம், ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடி முதலீட்டில், 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இத்திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் இதுகுறித்து தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
“ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1500 கோடியில் ஹாங் ஃபு நிறுவன தொழிற்சாலை அமைய இருப்பது தமிழ்நாட்டின் காலணி உற்பத்தித் துறையில் மற்றொரு மைல்கல்.
நைக், ஹோகா, ஆல்பேர்ட்ஸ், அடிடாஸ், பூமா, நியூ பேலன்ஸ், ரிபோக் உள்ளிட்ட சர்வதேச பிராண்டுகளை போல ஹாங் ஃபு உலகளவில் இரண்டாவது பெரிய தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
85% கிராமப்புற பெண்கள் என சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டில் திமுக அரசு கவனம் செலுத்துகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இந்த திட்டம், உலகளாவிய காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மேலும் வலுப்படுத்தும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெண்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்வதோடு, பெரம்பலூர், ராணிப்பேட்டை மற்றும் அதற்கு அப்பால் உள்ள மாவட்டங்கள் சீரான வளர்ச்சியை நோக்கி நகர்வதை உறுதி செய்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.