உலகக்கோப்பை நிறைவு விழாவில் ஹாலிவுட் பாப் பாடகர் துவா லிபா! கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!!
ஐசிசி உலகக்கோப்பை 2023 நிறைவு விழாவில் ஹாலிவுட் பாப் பாடகர் துவா லிபா கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை (நவ. 19) குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோத உள்ளது.
அகமதாபாத்தில் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 முடிவடையும் நிலையில், நிறைவு விழா நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வாக இருக்கும். 2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் நிறைவு விழாவில் ஹாலிவுட் பாப் பாடகர் துவா லிபா நிகழ்ச்சியை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மூன்று முறை கிராமி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, பிரதமர் நரேந்திர மோடியும் இறுதிப்போட்டியையும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பார்வையிட உள்ளார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதால், அதை பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் கூடுவார்கள். எனவே பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன்படி, வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய விமானப்படையினரின் சாகச நிகச்சி நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்பாக விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்துவது என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு தான் இந்திய விமானப்படையின் சார்பில் சாகசத்தை நிகழ்த்த உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த குழுவினர் மைதானத்தின் மேல்புறம் விமான சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். அப்போது ஐசிசி உலகக் கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களும் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
வெற்றி பெற்ற கேப்டன்களில் கபில் தேவ், ரிக்கி பாண்டிங், கிளைவ் லியோட், ஆலன் பார்டர், அர்ஜுனா ரணதுங்கா, ஸ்டீவ் வாக், எம்எஸ் தோனி, மைக்கேல் கிளார்க் மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் அடங்குவர். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் இம்ரான் கான், தற்போது சிறையில் உள்ளதால், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார். அதே நேரத்தில், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து கேப்டன்களும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் கௌரவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.