தொடர் கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
இடைவிடாது கனமழை பெய்துவருவதால், நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த, நான்கு மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைகிராமத்தில் மதியம் 3 மணி அளவு வரை 28.6 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 25.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து காலை முதல் மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி,ஐந்தருவி பழைய குற்றாலம் சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என்றும் மரங்கள் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்களின் மீது வெள்ளம் சென்றால் எக்காரணம் கொண்டும் அதன் மீது செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாளை (18.12.2023) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழை பெய்யக் கூடும் என்றும் கூறியுள்ளது.
தொடர் கனமழை பெய்து வருவதாலும், நாளை மிக கனமழை பொழியும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களால் நாளை இந்த 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி/கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. பெற்றோர்/ மாணவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும் வகையில் விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தென்காசி,தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் பெருமழை பெய்துவருவதால், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை டிசம்பர் 18-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.