Hockey Test League - டெல்லி மைதானத்தில் ஜெர்மனியை எதிர்கொள்ளும் இந்திய அணி!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று டெல்லி மேஜர் தயான்சந்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இந்த போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
டெல்லியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. கடைசியாக இந்த மைதானத்தில் 2014-ம் ஆண்டு உலக லீக் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இன்றைய போட்டியை நேரில் இலவசமாக கண்டுகளிப்பதற்காக தனியார் இணையதளம் வாயிலாக சுமார் 12 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். உலகத் தரவரிசையில் ஜெர்மனி 2-வது இடத்திலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி 5-வது இடத்திலும் உள்ளது.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 3 முறை வெற்றி பெற்றிருந்தது. 2 ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்தது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பட்டம் வென்ற நிலையில் ஜெர்மனிக்கு எதிரான தொடரை சந்திக்கிறது.