#Hockey India League | தமிழ்நாடு வீரர் கார்த்திக் ரூ.24 லட்சத்திற்கு ஏலம்!
தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, ஹாக்கி வீரர் கார்த்திக்கை ரூ.24 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில், ஹாக்கி இந்தியா லீக் போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இத்தொடர் நடைப்பெற்றது. 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இத்தொடர் வரும் டிச.28ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் 8 ஆடவர் அணிகளும், 6 மகளிர் அணிகளும் பங்கேற்க உள்ளன.
போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம், 3 நாட்கள் டெல்லியில் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், நேற்று தொடங்கியது. தொடர்ந்து 2-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த 2 நாள் ஏலத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, அரியலூர் கார்த்திக் உட்பட இதுவரை 11 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. தமிழ்நாடு ஹாக்கி வீரர் கார்த்தியை ரூ.24 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது. இன்னும் 13 வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 16 இந்திய வீரர்கள் (4 ஜூனியர் வீரர்களை கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்) மற்றும் 8 சர்வதேச வீரர்களை சேர்த்து 24 வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கிக் கொள்ளலாம்.
HIL 2024-25 டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கும். தொடக்க விழா ரூர்கேலாவில் நடைபெற உள்ளது. இத் தொடரின் போட்டிகள் ராஞ்சியில் உள்ள மரங் கோம்கே ஜெய்பால் சிங் ஆஸ்ட்ரோடர்ஃப் ஹாக்கி ஸ்டேடியம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் நடைபெறும்.