For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கே எனது ஆதரவு” - நடிகர் பிரசாந்த் பேட்டி!

10:00 AM Jul 21, 2024 IST | Web Editor
“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கே எனது ஆதரவு”   நடிகர் பிரசாந்த் பேட்டி
Advertisement

2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கே தனது ஆதரவு என நடிகர்
பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள போலோ பிரிமியர் லீக் மற்றும் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் ஆகிய போட்டிகளுக்கான லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரசாந்த், “சிறுவயதிலிருந்தே குதிரையேற்றத்தில் மிகவும் ஆர்வம் இருந்தது. கிண்டி கிளப்பில் தான் இதனை கற்றுக்கொண்டேன். திரைப்படங்களில் குதிரையேற்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன். குதிரை ஏற்றத்தின்போது குதிரைக்கும் பயணிப்பவருக்கும் ஏற்படும் நெருக்கம் அழகானது. தமிழர்களாக இணைந்து இத்தகைய நிகழ்வை கோவையில் நடத்த இருப்பதை ஊக்குவிப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.

அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது. ஜூலை 24 அன்று அந்தகன் திரைப்படம் குறித்த சிறப்பு அறிவிப்பு வெளியிட உள்ளோம். சிம்ரன், கார்த்திக் சமுத்திரக்கனி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். எனக்காகவும், எனது தந்தைக்காகவும் இவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டனர். இந்த சமயத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

GOAT பட நடன இயக்குனர் ராஜசுந்தரம், இயக்குனர் வெங்கட் பிரபு, சகோதரர் விஜய், பிரபுதேவா ஆகியிருக்கு இந்த செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மூவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்று வெங்கட் பிரபு கூறினார். நாங்கள் மூவரும் மிகவும் மகிழ்ச்சியோடு அதில் பங்கேற்றோம். அது சிறப்பாக வந்துள்ளது. அதில் மிகவும் மகிழ்ச்சி.

தற்போதைய காலகட்டம் Multi star படங்களுக்கானது. அதன் அடிப்படையில் GOAT திரைப்படம் அமைந்துள்ளது. அதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கும், தயாரிப்பு நிறுவனம் AGSக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல கதை இருந்தால் மட்டுமே நான் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். அதன் அடிப்படையில் பார்ட் 2 எடுப்பது என்றால் என் அனைத்து திரைப்படங்களுக்கும் பார்ட் 2 எடுக்கலாம் என்பேன்.

என் அப்பாவை பொறுத்தவரை அனைவரையும் அன்பாக அணுகக் கூடியவர். அவருடைய இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து அவரிடமிருந்து கற்றுக் கொண்டே இருக்கிறேன். திரைப்படங்களைப் பொறுத்தவரை சின்ன படம், பெரிய படம் என்ற வேறுபாடு இல்லை, கதை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த திரைப்படம் வெற்றிபெறும். அதற்கேற்றபடியான தளங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது.” இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, நடிகர் பிரசாந்திடம் 2026 தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கே எனது ஆதரவு” என தெரிவித்தார்.

Tags :
Advertisement