For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"முறையான சடங்குகள் இல்லாத இந்து திருமணம் செல்லாது" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

10:35 AM May 02, 2024 IST | Web Editor
 முறையான சடங்குகள் இல்லாத இந்து திருமணம் செல்லாது    உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால், இந்து திருமண சட்டப்படி,  அத்தகைய திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

விமானிகளாக பணியாற்றும் ஒரு ஆணும்,  பெண்ணும் முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.  விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை புகார் தெரிவித்து பெண் விமானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா,  அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு  வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

"திருமணம் என்பது ஓர் சடங்கு மற்றும் புதிய குடும்பத்துக்கான அடித்தளம் என இந்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  திருமணத்தில் வாழ்க்கைத் துணையை 'சம பாதியாக' கருத வேண்டும்.

திருமணம் என்பது பாட்டு ஆட்டம், விதவிதமான உணவு வகைகளுடன் கூடிய கொண்டாட்டத்தை மட்டும் கொண்ட நிகழ்வோ அல்லது வரதட்சிணை பெறும் வணிகப் பரிமாற்றமோ கிடையாது.  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கணவன்-மனைவி என்ற வளரும் குடும்பத்துக்கான புனிதமான அடித்தள நிகழ்வாகும்.  இதுதான் இந்திய சமூகத்தின் அடிப்படை.

இதையும் படியுங்கள் : சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… உயிர்பிழைத்த குடும்பத்தினர்!

இந்து திருமணச் சட்டம் இயற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும்,  கணவன்-மனைவி இடையேயான உறவின் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே வடிவமாக 'ஒற்றைத்தார மணம்' மட்டுமே உள்ளது.  பலதார மணத்தை இந்து திருமணச் சட்டம் நிராகரிக்கிறது. பல்வேறு சடங்குகள் சம்பிரதாய பழக்கவழக்கங்கள் அடிப்படையில் நடைபெற்ற ஒரே ஒரு திருமண முறை மட்டுமே இருக்க வேண்டும் என்பது இச்சட்டத்தை இயற்றிய நாடாளுமன்றத்தின் நோக்கமாகவும் உள்ளது.

அந்த வகையில்,  மணமகனும்,  மணமகளும் புனித வேள்விக்கு முன்பாக 7 அடி எடுத்து வைத்தல் உள்ளிட்ட உரிய சடங்குகளுடன் திருமணம் நடைபெறாவிட்டால்,  அந்தத் திருமணம் இந்து திருமணச் சட்டம் பிரிவு 7- இன் கீழ் இந்து திருமணமாக அங்கீகரிக்கப்படாது.  இதில் திருமணத்துக்கான சான்றிதழை மட்டும் சமர்ப்பிப்பது பலனளிக்காது.

'சிறப்பு திருமணச் சட்டம் 1954'-இன் கீழ் எந்தவொரு ஆணும்,  பெண்ணும் சாதி,  மதம், இனத்தைக் கடந்து எந்தவித சடங்குகள் இன்றி திருமணம் செய்துகொள்ள முடியும்.  இதில் இந்துக்களுக்கு விதிவிலக்கல்ல.  ஆனால், 'இந்து திருமணச் சட்டம் 1955'-இன் கீழ் அங்கீகரிக்கப்படும் திருமணங்கள் அச் சட்டத்தின் பிரிவு 7-இல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் :டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : VPN மூலம் ரஷ்யா டொமைன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! 

அந்த வகையில்,  இந்து சட்டத்தின் கீழ் உரிய சடங்குகள் இடம்பெறாமல் விமானி தம்பதியின் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில்,  அவர்களுக்கு வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் செல்லாது என்று அரசமைப்பு சட்டப் பிரிவு 142-இன் கீழான முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது.

மேலும்,  கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது மனுதாரர் தொடுத்த வரதட்சிணை புகார் மற்றும் விவாகரத்து நடைமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று தீர்ப்பளித்த நீதிபதிகள்,  'திருமணத்துக்கு முன்பு இளைஞர்களும் இளம் பெண்களும் அந்தப் புனிதமான பந்தம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்"

இவ்வாறு நிதிபதிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement