நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம்!
நியூஸ்7 தமிழ் பத்திரிகையாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ்7 பத்திரிக்கையாளர் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி உள்ளது ஒரு கும்பல். முன்னதாகவே பத்திரிகையாளர் நேசபிரபு தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதை புகார் கொடுத்த பிறகும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. புகார் தருபவர்கள் உயிர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து காவல்துறை செயல்படாமல் இருந்தது விபரீதமாக முடிந்திருக்கிறது.
இதுபோல் நடப்பது முதன்முறை இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். தமிழ்நாட்டில் போதை குற்றங்கள் பெருகி வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா போதை மருந்து பயன்படுத்துவது பெருகி வருகிறது. மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது. தினசரி பல இடங்களில் மது போதையில் தாக்குதல் நடப்பது சகஜமாக நடப்பது கவலை அளிக்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஊடகத்தினர் செய்தியாக வெளியிட முயற்சியை துணிச்சலாக எடுத்து வருகின்றனர்.
பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயல். நேசபிரபுவை யார் தாக்கியிருந்தாலும் கைது செய்து தண்டனை பெற தக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட நேசபிரபு விரைந்து குணமாக தக்க சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் கொடுக்க கேட்டுக் கொள்கிறோம்.”
இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.