மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் - பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கல்வி கொள்கையின்படி, அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள்" என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.