இமாலய இலக்கு நிர்ணயித்த ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் போராடி தோல்வி!
சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (மார்ச் 26) சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் 11 ரன்களில் வெளியேற, பின்னர் விளையாடிய டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன் ஆகிய ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் அந்த அணியால் இலக்கை அடைய முடியவில்லை. திலக் வர்மா 64 ரன்களும், டிம் டேவிட் 42 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் விளாசிய போதும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐபிஎல் வரலாற்றில் 2வது இன்னிங்ஸில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதையும் படியுங்கள் : “ரூ.410 இருந்த சிலிண்டரின் விலையை ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்தியதுதான் பிரதமர் மோடியின் சாதனை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த போட்டி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 523 ரன்கள் குவித்துள்ளன. 38 சிக்சர்கள் விளாசப்பட்ட நிலையில், அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஆட்டம் என்ற சாதனையையும் ஐதராபாத் - மும்பை ஆட்டம் படைத்துள்ளது.