இமாச்சலப் பிரதேசம் | பார்வதி ஆற்றில் ஆர்பரித்த காட்டாற்று வெள்ளம்.. சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!
இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று ஆற்றில் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவின் ராம்பூரில் இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மாயமாகி உள்ளனர்.
தகவல் அறிந்து பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மேலும் துணை ஆணையர் அனுபம் காஷ்யப் மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர் சஞ்சீவ் காந்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேக வெடிப்பினால் அப்பகுதியில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் உள்ள பார்வதி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று ஆற்றில் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாவே கட்டடித்திலிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே, இமாச்சலப் பிரதேசத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்பகுதியில் இன்று கனமழை முதல் அதிகனமழை வரை இருக்கும் என்று கணித்துள்ளது. அடுத்த 2-3 நாட்களுக்கு மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A building crumbles like a pack of cards in #Kullu #HimachalPradesh pic.twitter.com/T8xrGzAcLk
— Sushil Manav (@sushilmanav) August 1, 2024