ஹில்புல்லா அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்!
ஹில்புல்லா அமைப்பின் புதிய தலைவராக மதகுரு நயீம் காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்.7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.
இதனைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. ஓராண்டு கடந்தும் இரு நாடுகளுக்கிடையே தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. மேலும் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹில்புல்லா அமைப்பும், ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இவர்களின் தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே கடந்த மாதம் 28ம் தேதி லெபனான் தலைநகர் பெரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இது அந்த அமைப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. தலைவர் இன்றி அந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ஹில்புல்லா அமைப்பின் புதிய தலைவராக மதகுரு நயீம் காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமைப்பின் புதிய பொதுச் செயலராக நயீம் காஸிமை ஷூரா கவுன்சில் (ஹிஸ்புல்லாக்களின் நிர்வாகக் குழு) தேர்ந்தெடுத்துள்ளது. முழு வெற்றியை அடையும்வரை, மறைந்த ஹஸன் நஸ்ரல்லாவின் கொள்கைகளை நயீம் காஸிம் முன்னெடுத்துச் செல்வார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.