மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
”மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டின் மீது திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மும்மொழி என்ற பெயரில் இந்தி மொழி திணிக்கப்படுகிறது. மத்திய அரசின் வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிகம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் தாக்கல் செய்யப்படும். இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளில் அளிக்கும். மாநில சுயாட்சியின் முதல் குரல் தமிழ்நாட்டில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த பரிந்துரைகளை இக்குழு வழங்கும். ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
மாநில சுயாட்சியை பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயன் அளிப்பதாக உள்ளது. மேலும், இது பயிற்சி மையங்களை ஊக்குவித்தும் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பின்னடவை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. மாநில பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதால் மும்மொழிக் கொள்கை என்னும் போர்வையில் இந்தி மொழி திணிக்கப்படுகிறது”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.