முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கு - ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் என்பவரைத் தாக்கிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று(ஏப்.26) நடைபெற்றது. அப்போது ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "திமுக உறுப்பினரான நரேஷ் குமார் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நரேசை ஆயுதங்கள் கொண்டு யாரும் தாக்கவில்லை. படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நரேஷ், தனியாக மருத்துவமனைக்குச் சென்று 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார். பலத்த காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கைகள் உள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் இதுவரை கைப்பற்றப்படவில்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து காவல்துறை தரப்பு வழக்கறிஞர், “விசாரணையில் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது உறுதி செய்யப்பட்டது. அதனால், ஜெயக்குமார் உள்பட 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்து விட்டார்.