Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TrafficDisruption - மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நுழைவு வாயில்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

04:45 PM Sep 23, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவாயில் இரண்டையும் இடித்து அப்புறப்படுத்த, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை
அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே நக்கீரர் நுழைவு வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அலங்கார வளைவு வழியாக மட்டுமின்றி அதன் ஓரங்களிலும் இடம் இருப்பதால், அதன் வழியாகவும் வாகனங்கள் முந்திச் செல்ல முயல்கின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் போன்றவை முந்தி செல்ல அலங்கார வளைவின் ஓரங்களை பயன்படுத்துவதால், ஏராளமான விபத்துக்கள் நிகழ்வதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படவும்
காரணமாகிறது.

ஆகவே பழைய நக்கீரர் நுழைவு வாயிலை அகற்றி அகலமான புதிய அலங்கார வளைவை
அமைத்தால் வாகன ஓட்டிகளுக்கு எளிதாக அமைவதோடு, விபத்துக்கள் மற்றும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். இது தொடர்பாக நடவடிக்கை
கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் நுழைவு வாயில் எனும் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அகற்ற உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், சுந்தர் மோகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகராட்சி தரப்பில், நுழைவு வாயில்களை அப்புறப்படுத்துவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,

“மதுரை நகர் பகுதியில் உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டதன் நினைவாக, பேருந்து நிலையம் அருகே நக்கீரர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இதேபோல கே.கே.நகர் பகுதியில் பெரியார் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த அலங்கார நுழைவாயில் கட்டப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டதால், சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. இதனால் இந்த இரு நுழைவு வாயிலின் தூண்களும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே அமைந்துள்ளன.

நுழைவு வாயிலின் தூண்களுக்கு பின் உள்ள பகுதியை பலர் வணிக நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் இந்த நுழைவாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவையில்லை. ஆகவே 6 மாதங்களுக்குள்ளாக மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள நக்கீரர் நுழைவு வாயில் மற்றும் கேகே நகர் பகுதியில் உள்ள பெரியார் நுழைவாயில் ஆகியவற்றை அகற்ற மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு விரும்பினால், சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவிலான
நுழைவாயில்களை அமைத்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags :
Entrance GateHighCourt Of Madurai BranchMaduraiTraffic Disruption
Advertisement
Next Article