‘டேய் பாதர் என்னடா இதெல்லா’... ஓய்வு குறித்த தந்தையின் கருத்துக்கு பதிலளித்த அஸ்வின்!
இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்காமல், அவமதிக்கப்பட்டதே அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என அவர் தந்தை கூறிய நிலையில், அதற்கு அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று(டிச.18) அறிவித்தார். தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அஸ்வினுக்கு மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே அஸ்வினின் ஓய்வு குறித்து பேசிய அவரது தந்தை ரவிச்சந்திரன்,
“இந்திய அணியில் அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார். அஸ்வின் ஓய்வு அறிவிக்கப்போவது எனக்கும் கடைசி நிமிடத்தில் தான் தெரியவந்தது. அவர் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், நான் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
15 ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில் திடீரென ஓய்வு அறிவிக்கப்பட்டது இன்னும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதையும் அவர் எவ்வளவு காலம்தான் பொறுத்துக்கொண்டு இருப்பார்” என தெரிவித்தார்.
இந்நிலையில் தனது தந்தை கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
“எனது தந்தைக்கு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அனுபவம் கிடையாது… என்ன அப்பா இதெல்லாம்... வழக்கமான தந்தைகள் பேசும் டயலாக்கையே நீயும் பேசுவாய் என நினைக்கவில்லை... எனது தந்தையை மன்னித்து அவர் தனிமையில் இருக்க அனுமதியுங்கள்’ என்று கூறியுள்ளார்.