#HemaCommissionReport - கேரள திரையுலகம், அரசியலில் பெரும் அதிர்வலை!
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.
கேரள அரசிடம் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்து 5 ஆண்டுகளாகிய நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
அந்த நிபுணர் குழுவின் அறிக்கையில், மலையாள திரையுலகின் தொழில்துறையை சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 10-15 பேர் அடங்கிய அதிகார 'கும்பல்' கட்டுப்படுத்துகிறது. இவர்கள் திரையுலகின் பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர்' என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நடிகைகள் மட்டுமின்றி தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடும் பெண்களும் பாலியல் சமரசங்கள் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சமரசம் செய்ய மறுக்கும் பெண்களுக்கு திரைத் துறையில் அறிவிக்கப்படாத தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள 'ஹேமா குழு' அறிக்கை, மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறிக்கையை வெளியிடாமல் 5 ஆண்டுகள் காலம் தாழ்த்தி குற்றவாளிகளைப் பாதுகாத்ததாக ஆளும் இடதுசாரி கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முழு ஆதரவு தெரிவிப்பதாக கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் கூறினார். மேலும், குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுடனும், பெண் சமூகத்துடனும் அரசு என்றும் துணை நிற்கும்.
அறிக்கையின் எந்தப் பகுதி வெளியிடப்பட வேண்டும் என்பதை உயர்நீதிமன்றமும் தகவல் ஆணையமுமே முடிவெடுத்தது. இந்த அறிக்கையில் எந்த தனிநபர் குறித்தும் குற்றஞ்சாட்டப்படவில்லை’ என்றார் சாஜி செரியன்.
அமைச்சர் செரியனின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், 'திரையுலகைச் சேர்ந்த பெண்கள் ஹேமா குழுவிடம் மட்டுமே சென்று புகாரளித்ததாகவும், அரசிடம் புகாரளிக்கப்பட்டிருந்தால் முறையான விசாரணையை நடத்தியிருப்போம் எனவும் கலாசார விவகாரத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆரம்பக்கல்வியை உறுதிப்படுத்திய மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களைக் காக்க மாநில அரசு முயற்சிப்பதாகவும் குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் வலியுறுத்தினார்.
விரிவான திரைத்துறைச் சட்டத்தை உருவாக்குவது, திரைத் துறை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண தீர்ப்பாயம் அமைப்பது உள்பட ஹேமா குழு அறிக்கையின் பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ‘குழு பரிந்துரைத்த ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறை கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கும் அரசு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.