#HeavyRainAlert | இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை!
புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக 3மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.,27) புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 2 நாட்களில் தமிழக – இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.