#HeavyRain எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு #Leave அறிவிப்பு.. எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதே பகுதியில் இன்று (அக். 23) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக். 24) ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே டானா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அறிக்கையில் வானிலை ஆய்வு மண்டல அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக். 22) கனமழை பெய்தது. குறிப்பாக கோவையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக , அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகில் உள்ள பாலம், காளீஸ்வரா மில் சாலை, மேட்டுப்பாளையம் சாலை சிவானந்தா காலனி ஏ.ஆர்.சி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது.
இந்நிலையில், கன மழையின் காரணமாக இன்று (அக். 23) ஒரு நாள் மட்டும் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.