தென்காசியை புரட்டிப் போட்ட கனமழை - நீரில் மூழ்கி 90 ஆடுகள் பலி!
தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையினால் 90 ஆடுகள்
வெள்ளத்தில் மூழ்கிப் பலியானது.
தென்காசி மாவட்டம் ஆயக்குடி அருகே கம்பளி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணசாமி என்பவரது தோட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன், குத்தாலராமன் மற்றும் சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்த இருவருடைய ஆடுகள் என மொத்தமாக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் கிடை அமர்த்தி வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த கனமழையினால் தோட்டத்திற்குள் வெள்ளநீர் புகுந்து, அத்தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த ஆடுகளில் 90 ஆடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது.
இந்த சம்பவம் அறிந்து வந்த ஆயக்குடி பேரூராட்சி ஊழியர்கள், உயிரிழந்த ஆடுகளின் உடல்களை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு பரிசோதனை செய்து, அந்த பகுதியில் புதைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரே இடத்தில் 90 ஆடுகள் வெள்ளத்தில் மூழ்கிப் பலியான சம்பவம் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.