கங்கை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் - பீகாரில் தண்டவாளங்கள் மூழ்கியதால் #Trains ரத்து!
கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பீகாரில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த கனமழையாலும், நேபாளத்தில் பெய்த மழையாலும் கங்கை உட்பட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி வளாகங்களும் நீரில் மூழ்கியுள்ளன. ரயில்வே தண்டவாளம் முதல் நெடுஞ்சாலை வரை அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ரயில்களின் இயக்கம் மற்றும் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதிக்குச் செல்லும் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது, "சுல்தான்கஞ்ச் மற்றும் ரத்தன்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் வெள்ள நீர் பாய்ந்துள்ளது. இதன்காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஜமால்பூர் - பாகல்பூருக்கு இடையே இயங்கும் ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
பாட்னா-தும்கா எக்ஸ்பிரஸ், சராய்கர் - தியோகர் ஸ்பெஷல், ஜமால்பூர்-கியுல் மெமு ஸ்பெஷல் மற்றும் பாகல்பூர்-தானாபூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அஜ்மீர்-பகல்பூர் எக்ஸ்பிரஸ், விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ், ஹெளரா-கயா எக்ஸ்பிரஸ், சூரத்-பாகல்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விஹார்-மால்டா டவுன் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரம்மபுத்ரா ஆகிய ரயில்கள் திருப்பிவிடப்பட்டள்ளன."
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.