வங்ககக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - பல்வேறு மாவட்டங்களில் கனமழை!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்த தகவல்களை காணலாம்.
வங்ககக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
நெல்லை :
இதன் ஒரு பகுதியாக நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கே.டி.சி. நகர், கீழநத்தம், திருநெல்வேலி டவுன் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 421 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஊத்து பகுதியில் 540 மில்லி மீட்டர் மழையும், நாலுமுக்கு, தெற்கு வீரவநல்லூர், சீதபற்பநல்லூர் பகுதியில் தலா 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்காசி :
அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக நள்ளிரவில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனிடையே தென்காசி ஆயக்குடி பகுதியில் 31 செ.மீ மழையும்,செங்கோட்டையில் 24 செ.மீ, தென்காசி நகரப் பகுதியில் 23 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் ,கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
அதேபோல் விளாத்திகுளம் பகுதியில் உள்ள பேருந்து பணிமனையில் வெள்ள நீர் புகுந்ததாக சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மழை நீர் வெளியேற்றும் பணியை மேற்கொண்டார். மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.