"மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட்!" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 243-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கனமழை காரணமாக நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு,கண்ணூரர்,கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
மேலும், வட கேரளாவில் கனமழைக்கான தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலப்புரம்,பாலக்காடு,திருச்சூர்,எர்ணாகுளம்,இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோட்டயம்,ஆலப்புழா,பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலை ஆக்ரோஷமாக எழும் எனவும் படகுகள் பாதுகாப்புடன் வைக்கவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.