கூடலூரில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கூடலூரில் பெய்து வரும் கனமழையால், இருவயல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு பகலாக
கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 12 மணி நேரத்தில் பந்தலூரில் 8.4 சென்டிமீட்டர் மழையும்,
கூடலூரில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மிக கனமழை காரணமாக கூடலூர் அருகே அமைந்துள்ள இருவயல் கிராமத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெளியேறிய வெள்ளை நீரானது
கிராம பகுதியை முற்றிலும் சூழ்ந்தும் ஏரி போல் காட்சியளிப்பது மட்டுமல்லாமல்
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
இதையும் படியுங்கள் : உட்கட்சி மோதல்! முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி – உ.பி. அரசியலில் பரபரப்பு!
இதனால் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீர் காரணமாக பாதிக்கப்பட்ட 13
குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அருகே 2 வது நாளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவயல் கிராமத்தில் மழைக்காலங்களில் தொடர்ந்து இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால் கிராம பகுதியில் அமைந்துள்ள ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.