கேரளாவில் கனமழை - 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரையை நோக்கி கடக்க உள்ளதால் கேரளாவில் இன்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள கடல் பகுதியில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கேரள மற்றும் லட்ச தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாளையும் மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.