கேரளாவில் கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று, கனமழை பெய்யும் என்று வானிலை மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணூர், வயநாடு, கோட்டயம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி அங்கன்வாடிகள், மதரசாக்கள் மற்றும் பயிற்சி மையங்களும் வகுப்புகளை நடத்தக்கூடாது என்று அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. மேலும் திருச்சூர், மலப்புரம், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.